திருத்தணி கோயிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பு சொத்துகள் மீட்பு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி நடவடிக்கை

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சொந்தமான .25 கோடி மதிப்புள்ள சொத்துகள் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று (10.12.2025) திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சென்னை தங்கசாலை பகுதியிலுள்ள ரூ.25 கோடி மதிப்பிலான வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வசந்த உற்சவ கட்டளை மற்றும் அகண்ட கட்டளைக்கு சொந்தமாக சென்னை தங்கசாலை பகுதியில் 9,575 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன.

இக்கட்டிடங்கள் அமைந்துள்ள சுப்புசெட்டித் தெருவில் ஈ.கே. பிரசாத் மற்றும் 3 நபர்கள், தியாகராய பிள்ளை தெருவில் ஏ.ஆர், ராமச்சந்திரன் மற்றும் 4 நபர்கள், தங்கச் சாலையில் திருமதி வள்ளியம்மாள் மற்றும் 8 நபர்கள் என மொத்தம் 18 நபர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தனர். இது தொடர்பாக வேலூர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் சட்டப்பிரிவு 78(1)-ன் கீழ் ஆக்கிரமிப்புதார்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று (10.12.2025) திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/ செயல் அலுவலர் திருமதி க.ரமணி, திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் தி அனிதா, சென்னை-1 உதவி ஆணையர் க. சிவகுமார், திருத்தணி திருக்கோயில் உதவி ஆணையர் க. விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் உதவி ஆணையர் மு. சிவஞானம் அவர்களால் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் துணையுடன் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 25 கோடியாகும். இந்நிகழ்வின் போது, தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) பாலாஜி, சிறப்பு பணி செயல் அலுவலர்கள் மாதவன், பிரகாஷ், , ஆய்வாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: