வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே வெட்டாறு மற்றும் வெண்ணாறு, சுள்ளன் ஆறு கரையோரம் உள்ள கிராமங்களில் விவசாயிகள் விதை விட்டுள்ள நாற்றங்கால்களை இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வந்து காட்டுப் பன்றிகள் நாசப்படுத்தி விவசாயிகளுக்கு பொருளாதர நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த காட்டு பன்றிகள் நாற்றாங்கால் களை மட்டுமல்லாமல் இயந்திரம் மூலம் நடவு செய்த வயல்களையும் நாசப்படுத்தி வந்த நிலையில் தற்போது கரும்பு வயல்களையும் சேதப்படுத்தி வருகிறது.
இதுபற்றி பூந்தோட்டம் ஊராட்சி சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சக்கரவர்த்தி கூறுகையில், 10 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். சுமார் நான்கு ஏக்கர் அளவிற்கு காட்டுப் பன்றிகள் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் கரும்பு வயல்களில் புகுந்து வேருடன் சாய்த்து சேதப்படுத்துகின்றன. ஓரிரு மாதங்களில் மகசூல் பெற வேண்டிய நிலையில் கரும்புகள் சேதம் ஆகி இருப்பதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மழை உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக காட்டு பன்றிகளால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
