அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அளவிடும் பணிகள் நிறைவு: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

 

சென்னை: பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிவடைந்து விட்டது. மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை பெற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு அளித்த விளக்கத்தில், தமிழ்நாடு வனச்சட்டம், 1882-ன் கீழ் பள்ளிக்கரணையில், சுமார் 698 ஹெக்டேர் பரப்பளவு, பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடாக கடந்த 2007ம் அறிவிக்கப்பட்டது.

அந்த இடத்தில் எந்த விதமான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. மேலும் தற்போதைய பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு கொண்ட குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் 99 சதவிதம் முடிவடைந்து விட்டதாகவும், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறுக்கும் பணிகள் நடந்து வருவதாக குறிப்பிட்டார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பள்ளிக்கரணை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிவடைந்து விட்டது என்றும் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை பெற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் தொடர்ந்த வழக்கு ஜனவரி நான்காவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: