சிவகாசி: சர்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டியில் சிவகாசியை சேர்ந்த 50 வயது பெண் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் கண்ணா நகரை சேர்ந்தவர் தவசிகுமார். அச்சக தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி பாண்டிமாதேவி(50), உணவியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு மணிகண்டன், ஹரிஹரன் என இரண்டு மகன்கள். இவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பாண்டிமாதேவிக்கு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் உண்டு. இதனால், தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 20 நாடுகளில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பில் 19 பேர் பங்கேற்றனர். இதில் 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிப்பிரிவு போட்டியில் பாண்டிமாதேவி 310- கிலோ எடையை லாவகமாக தூக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். சாதனை படைத்து ஊர் திரும்பிய அவருக்கு சிவகாசியில் சக வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் சார்பில் கேக் வெட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பாண்டிமாதேவி கூறியதாவது: உடலை பேணிக்காக்க தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். சாதனை படைக்க வயது ஒரு தடையல்ல. எந்த வயதிலும், யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். 37 வயதிற்கு பிறகே உடற்பயிற்சி செய்வதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. தற்போது 50 வயதில் சாதனை படைக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். வரும் காலங்களில் மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனைப் படைக்க ஆசைப்படுகிறேன் என்றார்.
