மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சீரமைப்பு

வருசநாடு, ஜன. 17: கடமலைக்குண்டு கிராமத்தில் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த குழாய்களை சீரமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடமலைக்குண்டு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், வைகை ஆற்றில் உறைகிணறு அமைத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது உறை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் மற்றும் மின்மோட்டார்கள் சேதமடைந்தன. இதனால் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறை கிணறுகளில் சீரமைப்பு பணி நடைபெற்றது. ஆனால் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் புதிய குடிநீர் குழாய்கள் பொருத்த முடியவில்லை. இதனையடுத்து தற்காலிகமாக உறை கிணற்றின் மேல் பகுதி வழியாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கடமலைக்குண்டு ஊராட்சிமன்ற தலைவர் சந்திராதங்கம், செயலர் துரைப்பாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இதேபோல் வருசநாடு, சிங்கராஜபுரம், தும்மக்குண்டு, தங்கம்மாள்புரம், முருக்கோடை, நரியூத்து, மயிலாடும்பாறை உள்ளிட்ட ஊராட்சிகளில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விரைவில் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: