தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

ஆண்டிபட்டி, ஜன. 17: தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 8,200 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்களப்பணியாளர்கள் உள்பட மொத்தம் 7,354 பேர் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்டமாக நேற்று 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியினை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். இதில் முதலாவதாக அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் இளங்கோவனுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் இளங்கோவன், நிலைய துணை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமரன், உதவி நிலைய மருத்துவர்கள் ஈஸ்வரன், மணிமொழி ஆகியோர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: