ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஷூட்அவுட்டில் உருகுவே வேட்டையாடிய இந்தியா

சான்டியாகோ: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் உருகுவே அணியை, ஷூட் அவுட்டில் இந்தியா அபாரமாக வென்றது. சிலி தலைநகர் சான்டியாகோவில் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், இந்தியா – உருகுவே அணிகள் இடையே போட்டி நடந்தது. இரு அணி வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக மோதிய இப்போட்டியின் 19வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை மணிஷா முதல் கோலை போட்டார். 60வது நிமிடத்தில் உருகுவே அணியின் ஜஸ்டினா அரேகுய் தனது அணிக்காக ஒரு கோல் போட்டு சமனை ஏற்படுத்தினார்.

அதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இந்திய அணிக்காக, பூர்ணிமா யாதவ், இஷிகா, கனிகா சிவாச் தலா ஒரு கோல் போட்டனர். மாறாக, உருகுவே அணி வீராங்கனைகளால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. இந்திய அணியின் கோல் கீப்பர் நிதி, அட்டகாசமாக செயல்பட்டு 3 முறை கோல்களை தடுத்ததால் இந்திய அணிக்கு வெற்றி வசப்பட்டது. இதையடுத்து, 9 மற்றும் 10வது இடத்துக்காக இன்று நடக்கும் போட்டியில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. இதில் வெல்லும் அணி, 9ம் இடத்தையும் தோற்கும் அணி 10ம் இடத்தையும் பிடிக்கும்.

Related Stories: