கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்று காலை வீசிய பலத்த காற்றால் மலைச்சாலையில் 2 இடங்களில் மரங்கள் விழுந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் `டிட்வா’ புயல் காரணமாக அண்மையில் பலத்த மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இருப்பினும், பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. நள்ளிரவில் கடுங்குளிர் நிலவுகிறது.
இந்நிலையில், கொடைக்கானலில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால், கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் டைகர் சோலை அருகே, ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனம் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதேபோல, பெருமாள்மலை அருகிலும் மற்றொரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் இந்த பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர். இதையடுத்து வாகன போக்குவரத்து சீரானது.
