*தத்ரூபமாக செய்து காண்பித்தனர்
முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் மழை மற்றும் வெள்ளகாலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை மட்டுமே கடல் பகுதி என்பதால் புயல் மற்றும் கனமழை இதுபோன்ற பேரிடர் காலங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும். கடந்த 2018ஆம் ஆண்டு இப்பகுதியை புரட்டிபோட்ட கஜா புயலில் பாதிப்பு அதிகளவு. ஆண்டுகள் கடந்து இருந்தாலும் அந்த பாதிப்பிலிருந்து இன்னும் பல மக்கள் மீளவில்லை.
இந்நிலையில் கடந்த புட்வா புயல் காரணமாக முத்துப்பேட்டை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் அதிக மழை பதிவானது முத்துப்பேட்டைதான். மழை நின்றும், பல இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் நீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் முடங்கி உள்ளனர். அதேபோல் கனமழையால் மக்களுக்கு வேலைக்கு செல்லாமல் முடங்கியுள்ளனர். இன்னும் மழை அடிக்கடி பெய்துக்கொண்டே உள்ளது.
அதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் வடிய வாய்ப்பில்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் முத்துப்பேட்டைக்கு நேற்று என்டிஆர்எப் என்னும் தேசிய பேரிடர் மீட்புப் படை வந்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை 32.துரைக்காடு வருவாய் கிராமம், பாமணி ஆற்றில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தினால் ‘வெள்ள நீர் மீட்பு என்ற சூழ்நிலையை அடிப்படையாக கொண்ட மாதிரி பயிற்சியானது வருவாய்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, மீன்வளத்துறை இணைந்து சிறப்பு ஒத்திகை நடைபெற்றது. அப்போது பாமணி ஆற்றில் வெள்ளநீரில் ஒருவர் அடித்து சென்றால் எப்படி அவரை மீட்பது, அதேபோல் வெள்ளநீர் ஒரு பகுதியை சூழ்ந்தால் அப்பகுதி மக்களை எப்படி மீட்பது.
அதேபோல் கரையில் தவிக்கும் மக்களை எப்படி மீட்பது, வெள்ளத்தில் மக்களை அடித்து செல்லும்போது அவர்கள் உயரமான பகுதிகள் தென்னை மரங்கள், வாட்டர் டேங் உள்ளிட்ட பகுதியில் தப்பி நிற்கும்போது எப்படி காப்பாற்றுவது, பேரிடரில் உயிருக்கு போராடும்போது முதலுதவி எவ்வாறு செய்வது. பின்னர் உயிருக்கு போராடும் மக்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்வது உள்ளிட்ட செயல்பாடுகளை தத்ரூபமாக என்டிஆர்எப் வீரர்கள் தீயணைப்பு துறை வீரர்கள், காவல்துறையினர் செய்து காட்டினர்.
மேலும் என்டிஆர்எப் வீரர்கள் உடனடியாக மக்களை காப்பாற்ற தேவையான படகு உள்ளிட்ட உபகரணங்களை உடனடியாக தயார் செய்து அதனை பயன்படுத்தி செய்து காட்டினர். அதேப்போல் தற்காலிகமாக தார்பாய் கொண்டு கூரை அமைத்தல், ஜெனரேட்டர் கொண்டு மின் சப்ளை, தொலை தொடர்பு சாதனங்கள் அமைப்பு உள்ளிட்டவை தத்ரூபமாக செய்தனர். இதனை மக்கள் பார்க்கும்போது உண்மையாக நடப்பது போன்று உணர்வு ஏற்பட்டது. அதனால் இந்த தத்ரூபமாக நடைபெற்ற பயிற்சி மக்களிடையே அச்சத்தை போக்கி வரவேற்பை பெற்றது.
இந்த சிறப்பு ஒத்திகை பயிற்சியில் என்டிஆர்எப் தலைமை அதிகாரி குப்தா, என்டிஆர்எப் இன்ஸ்பெக்டர் கலையரசன், மன்னார்குடி ஆர்டிஓ யோகேஸ்வரன், முத்துப்பேட்டை தாசில்தார் கிருஷ்ணகுமார், முத்துப்பேட்டை டிஎஸ்பி பிலிப் பிராங்கில் கென்னடி, இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்.இன்ஸ்பெக்டர் ராகுல், ஆர்ஐ மஹாலட்சுமி, மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ் குமார், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முத்துப்பேட்டை செல்வராஜ், திருத்துறைப்பூண்டி நடராஜன், திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் ரவி மற்றும் வருவாய்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, மீன்வளத்துறை முதல்நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
