*விற்பனையை தவிர்த்த வியாபாரிகள்
ஊட்டி : முருங்கைக்காய் விலை விண்ணை தொட்டதால், நீலகிரி மாவட்டத்தில் காய்கறி கடைகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருவதையே வியாபாரிகள் தவிர்த்து விட்டனர்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி உட்பட பல காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
இதுதவிர பல்வேறு காய்கறிகள் சமவெளிப் பகுதிகளில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன. லாரிகள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் கொண்டு வந்து உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக சமவெளிப் பகுதிகளில் இருந்து ஒரு சில விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
இதனால், மார்க்கெட்டை விட விலை சற்று குறைவாக காணப்படும். இதனால், பெரும்பாலான பெண்கள் உழவர் சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்குவது வழக்கம். பொதுவாக வீடுகளுக்கும், ஓட்டல்களுக்கும் சாம்பாருக்கு முருங்கை காய்களையே அதிகம் வாங்கிச்செல்வது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக முருங்கை விலையை கேட்டாலே பெண்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது முருங்கை விலை கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், நீலகிரி மாவட்டத்தில் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் முருங்கைக்காய் வாங்குவதையே தவிர்த்து விடுகின்றனர். விலை அதிகம் என்பதால், மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு முருங்கைக்காயை கொண்டு வருவதையே வியாபாரிகள் தவிர்த்து வருகின்றனர்.
உழவர் சந்தைகளிலும் தற்போது முருங்கையை அதிகம் காண முடிவதில்லை. சமவெளிப் பகுதிகளிலேயே முருங்கை விலை அதிகம் என்பதால், அதனை வாங்கி வந்து விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மார்க்ெகட்டில் ஒரு சில கடைகளில் மட்டுமே முருங்கைக்காய் விற்பனை செய்யப்படுகிறது.
