சென்னை: பவானி நகர செயலாளர் நாகராஜன் மறைவிற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘நாகராஜன், ஈரோடு மாவட்ட கழகத்தினரின் அன்பையும் அபரிமிதமான மரியாதையையும் பெற்றிருந்த ஒப்பற்ற செயல்வீரர். கடந்த மாதம் நான் ஈரோடு மாவட்டத்துக்கு அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க சென்றிருந்தபோதும் மிக சிறப்பான வரவேற்பினை வழங்கியிருந்தார்.
நிகழ்ச்சிகளை பாங்குடன் ஒருங்கிணைப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் தளகர்த்தராக திகழ்ந்தவர் நாகராஜன். கால்நூற்றாண்டு காலம் பவானி நகர கழக செயலாளராக பணியாற்றிய நாகராஜனுக்கு சிறந்த நகர கழக செயலாளர் என்று விருது வழங்கியிருந்ததையும் நெகிழ்ச்சியோடு இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
