பாலஸ்தீன ஆதரவு விவகாரம்; டிரம்ப் அரசுக்கு எதிரான வழக்கில் மாணவி வெற்றி: பல்கலையில் மீண்டும் பணிபுரிய அனுமதி

பாஸ்டன்: அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு மாணவிக்கு விதிக்கப்பட்டிருந்த பணித் தடையை நீக்கி டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவியான ருமைசா ஒஸ்டுர்க் என்பவர், பாலஸ்தீன ஆதரவு செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அவர் கைது செய்யப்பட்ட அதே நாளில், வெளிநாட்டு மாணவர்களைக் கண்காணிக்கும் தரவுத் தளத்திலிருந்து இவரது பெயர் சட்டவிரோதமாக நீக்கப்பட்டது.

இதனால் விசா நடைமுறைகளில் சிக்கல் ஏற்பட்டதோடு, அவரால் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழலும் உருவானது. டிரம்ப் தலைமையிலான அரசின் குடியேற்ற அமலாக்கத் துறை எடுத்த இந்த நடவடிக்கையால் இவரது கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கூட்டாட்சி நீதிபதி டெனிஸ் கேஸ்பர் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கினார். மாணவி ருமைசா ஒஸ்டுர்க்கின் பெயரை தரவுத் தளத்தில் உடனடியாக இணைக்குமாறும், அவர் மீண்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ருமைசா, ‘நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; நான் அனுபவித்த அநீதியை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

Related Stories: