மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான டிசம்பர் 10 அன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்

சென்னை: மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான டிசம்பர் 10 அன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில், மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான 10.12.2025 அன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர் பெருமக்கள், சென்னை பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

மூதறிஞர் இராஜாஜி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில், 10.12.1878 ஆம் ஆண்டு பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராகப் பணியாற்றி, பின், சேலம் நகராட்சி மன்றத் தலைவராக விளங்கினார். அப்பொழுது ஊதியமே வாங்காமல், தம் மக்கள் பணியைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் நடந்த உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தினை முன்னின்று நடத்தினார். இதனைத் தொடர்ந்து, 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் வெற்றி பெற்று, அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். தம் வாழ்நாளின் இறுதிவரையில் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தார். தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர். ஒன்றிய உள்துறை அமைச்சர் என நாட்டின் மிக உயர்ந்த பதவிகளை வகித்துள்ளார்.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் மதுவிலக்குத் திட்டத்தினைச் செயல்படுத்தி, அதனால், அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்கின்ற வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக விற்பனை வரி வசூலிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் ஆலய நுழைவுக்கு உதவினார். விவசாயிகளின் கடன் சுமையைக் குறைத்திடும் வகையில் சட்டம் கொண்டு வந்தார். தீண்டாமை ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். கலப்புத் திருமணத்தினைத் தன் இல்லத்திலேயே நடைமுறைப்படுத்தினார்.

முதிர்ந்த அரசியல் ஞானமும், ஆழ்ந்த அனுபவமும் கொண்டிருந்த மூதறிஞர் இராஜாஜியின் நேர்மையும், எளிமையும் மக்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றவை. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்று, அரசு மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது, தமக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருள்கள் அனைத்தையும் முறையாக அரசிடம் ஒப்படைத்துவிட்டுத் தமது கைத்தடியுடன் வெளியேறினார். விடுதலைப் போராட்டத்திலும், அரசு நிருவாகத்திலும் தமது அளப்பரிய பணிகளை ஆற்றிய போதிலும், இலக்கியத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக அரிய பல நூல்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். அவர் எழுதிய பல நூல்களில் ‘சக்கரவர்த்தித் திருமகன்’, ‘வியாசர் விருது’ ஆகிய நூல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற நூலுக்காக அவருக்கு 1958ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

மூதறிஞர் இராஜாஜி 1954 ஆம் ஆண்டு இந்தியத் திருநாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த வீடு அரசின் சார்பில் அரசுடைமையாக்கப்பட்டு நினைவில்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மூதறிஞர் இராஜாஜி உப்பு சத்தியாகிரகம் முதலான சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று, பலமுறை சிறை சென்ற மகத்தான தியாகி என்பதால் அவருக்குச் சுதந்திரப் போராட்ட வெள்ளி விழாவின் போது, ஒன்றிய அரசு வழங்கிய தாமிரப் பட்டய விருதினை, முத்தமிழறிஞர் கலைஞர், 3.10.1972 அன்று இராஜாஜி இல்லம் சென்று அவருக்கு மலர்மாலை அணிவித்து வழங்கினார்.

மூதறிஞர் இராஜாஜி, 25.12.1972 அன்று மறைந்தார். அவருடைய நினைவாக, 1973 டிசம்பர் 25 அன்று சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், மூதறிஞரை போற்றும் வகையில் அவர் விரும்பும் கிரீடம் போலவே அவருடைய சிலையுடன் கூடிய நினைவாலயத்தை வடிவமைத்துக் கட்டி, விடுதலைப் போராட்ட தியாகி ஜெயபிரகாஷ் நாராயணனை கொண்டு, 5.5.1975 அன்று திறந்து வைத்தார்கள்.

மூதறிஞர் இராஜாஜியின் நூற்றாண்டு விழாவின்போது, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், 24.12.1978 அன்று அவருக்குச் சிலை நிறுவித் திறந்து வைக்கப்பட்டது. அவருடைய நினைவைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 10 ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் நாளன்று அமைச்சர் பெருமக்கள், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மூதறிஞர் இராஜாஜி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,துணை மேயர், ள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

Related Stories: