பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து வழக்கு; எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் சிக்கல்: உச்சநீதிமன்றத்தில் திடீர் மேல்முறையீடு

புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சூரியமூர்த்தி தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், ‘என்னை அதிமுக கட்சியின் உறுப்பினர் கிடையாது என்றும், இந்த வழக்கை தாக்கல் செய்ய எனக்கு உரிமை இல்லை என்றும் கூறப்பட்டதில் எந்தவித முகாந்திரமும் இல்லை; இது சட்ட விதிகளுக்கு முரணானது’ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து, அதனை ரத்து செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: