ஊட்டி : ஊட்டி தேயிலை பூங்காவில் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலும், பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. பூங்கா மற்றும் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பழங்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஜாம், ஊறுகாய் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு மரக்கன்றுகள், தேயிலை நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி அருகில் உள்ள தொட்டபெட்டா பகுதியில் அரசு தேயிலைப் பூங்கா அமைந்துள்ளது.
தேயிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும் தோட்டக்கலைத்துறை மூலம் இந்த தேயிலை பூங்கா செயல்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள தேயிலைப் பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
இந்தத் தேயிலைப் பூங்காவில் உள்ள நாற்றங்கால்களில் அழகு தாவரங்கள், மூலிகைத் தாவரங்கள் மற்றும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேயிலை விவசாயிகளுக்கு தரமான நாற்றுகளை சரியான விலையில் வழங்கும் நோக்கில் பதியன் முறையில் தேயிலை நாற்றுக்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
தற்போது தேயிலை பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை நாற்றுகள் உற்பத்தி ெசய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு குறைந்த விலையில், விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
