பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்களை பாக்கெட் செய்து கொடுத்தால் அபராதம்

*உணவு பாதுகாப்பு அலுவலர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மூலம் உணவுப்பொருட்கள் பார்சல் செய்து கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பேசுகையில்,பல்வேறு பகுதிகளில் காலாவதி உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

பழைய எண்ணெயில் பலகாரங்கள் செய்து விற்பனை செய்வது, ஓட்டல்களில் பிளாஸ்டிக் ஜக்குகளில் தண்ணீர் வைப்பது ஆகியவற்றை தடுக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சைவம் அசைவம் தனி தனி பாத்திரங்களில் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

கேக் உள்ளிட்ட இனிப்பு வகைகள் பழையன விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பால், மீன், இறைச்சி உள்ளிட்டவை திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்வது சுகாதாரத்துக்கு கேள்விக்குறி ஏற்படுத்துகிறது. இவைகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உணவகங்களில் விலை பட்டியல் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தி உணவுப்பொருட்கள் பொட்டலமிட்டு கொடுப்பதை தடுக்க வேண்டும்.

பழங்கள் கார்பைட் கற்கள் வைத்து பழுக்க வைப்பது, பார்மாலின் கலந்து மீன் விற்பனை செய்வது, சுகாதார அலுவலர் அல்லது சுகாதார ஆய்வாளர் முத்திரை இன்றி கறிகள் விற்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உணவகங்களில் சமையல் செய்யும் இடங்கள், பணியாளர்கள் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி பதிலளித்து பேசியதாவது:

மாவட்டத்தில் காலாவதி உணவுகள் மற்றும் உணவு பொருட்கள் தரம் குறித்து அறிய அனைத்து பகுதியிலும் ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். பிளாஸ்டிக் ஜக்குகளில் சூடான நீர் வைக்கும் போது பிளாஸ்டிக் கசிவு தண்ணீரில் கலக்கும்.

இதனால் புற்றுநோய் ஏற்படும் என்பதால் பிளாஸ்டிக் ஜக்குகள் தவிர்த்து சில்வர் ஜக்குகள் பயன்படுத்த அறிவுறுத்தபடும். பிளாஸ்டிக் கவர்கள் மூலம் உணவுப்பொருட்கள் பார்சல் செய்து கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும். சட்டப்படி சைவம்-அசைவம் தனித்தனியாக பரிமாற வேண்டும் என்பது குறித்து உரிய அறிவுரை வழங்கப்படும்.

மீன், பழங்கள் பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும், ரசாயன கலப்பு இன்றி விற்பனை செய்யவும் அறிவுரை வழங்கப்படுகிறது. ஆய்வு மேற்கொள்ளும் போது ரசாயன கலப்பு தெரிந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளில் வண்ணங்கள் சேர்த்தல், பழையன விற்பனை செய்தல் போன்ற செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: