தரம் தாழ்ந்த அரசியல்வாதிகளால் எங்களை போன்று நேர்மையாக இருப்பவர்களுக்கு சாபக்கேடு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தண்டையார்பேட்டை: தரம் தாழ்ந்த அரசியல்வாதிகளால் எங்களை போன்று நேர்மையாக இருப்பவர்களுக்கு சாபக்கேடு என மண்ணடி காளிகாம்பாள் கோயில் கிழக்கு ராஜகோபுரத்தை உயர்த்தும் பணியை இன்று துவக்கி வைத்து அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி தம்புசெட்டி தெருவில் அருள்மிகு காளிகாம்பாள் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தை உயர்த்தும் பணி துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு பணியை தொடங்கிவைத்தார். இதையடுத்து பூங்கா நகரில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில், தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில், 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: காளிகாம்பாள் கோயிலுக்கு குடமுழுக்கு 2013ம் ஆண்டு நடைபெற்ற நிலையில், ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெற்ற 12 ஆண்டுகள் முடிவுற்ற கோயில்களுக்கு ஜனவரி மாதத்தில் 5 ஆயிரம் குடமுழுக்கு நடத்தப்படு உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய ஆன்மீக அமைதி புரட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த துறை காளிகாம்பாள் கோயிலுக்கு ஏற்கனவே மூன்றரை கோடி ரூபாய் செலவில் வெள்ளி தேர் உலா வரவும் அர்ப்பணிக்கப்பட்டது. ரூ.2.37 கோடி செலவில் திருப்பணி நடைபெற்றுள்ளது. கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதியுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தரையில் இருந்து நவீன தொழில்நுட்பத்தில் மூன்றரை அடி உயரத்தில் 40 லட்சம் செலவில் காளிகாம்பாள் ராஜகோபுரம் உயர்த்தப்பட உள்ளது. ஏற்கனவே 11 கோவில்களில் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தோடு உயரத்தை அதிகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக முதல்வர் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. நயினார் நாகேந்திரன் குறித்த கேள்விக்கு, எந்த ஒரு கொள்கையையும் மையப்படுத்தி மக்களை பிளவுபடுத்தக்கூடாது. சமாதானம் என்பது அனைத்து நிலையிலும் மக்களை சமன்படுத்துவது. செல்லூர் ராஜூ பேச்சுக்கு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக அடிக்கும் பல்டி ஆகாய பல்டி, ஆளாளுக்கு ஒரு கோணத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் கட்சி அதிமுக. எச்.ராஜா போன்றவர்கள் பேசுவதை எல்லாம் ஒரு பேச்சாக எடுத்து கொள்ளக்கூடாது.

தரம் தாழ்ந்த அரசியல்வாதிகளால் எங்களை போன்று நேர்மையாக இருப்பவர்களுக்கு சாபக்கேடு. திருவொற்றியூர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு பொதுமக்களை உதாசீனப்படுத்துவது போன்ற சமூக வலைதளத்தில் பரவும் காணொளி தொடர்பான கேள்விக்கு, செய்கைகளை எப்படி வேண்டுமானாலும் திருத்திசொல்லப்படலாம். இன்று மட்டும் 50 ஆயிரம் பேர் வருகை தந்திருக் கிறார்கள். சற்று பொறுமையாகதான் செல்ல வேண்டி இருக்கிறது. உங்களுக்கு வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல் லுங்கள் உதவி செய்கிறோம், முடியவில்லை என்றாலும் சொல்லுங்கள் உதவி செய்கிறோம் என்றுதான் சொன்னோம். அங்கொன்றும் இங்கொன்றும் வெட்டி வெட்டி ஓட்டினால், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். விஐபி தரிசனம் என்பது பணி அவசியத்தை பொருத்தது. இவ்வாறு கூறியுள்ளார். நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் மோகன், அறங்காவலர்கள் சர்வேஸ்வரன், ராஜேந்திரகுமார், சீனிவாசன், ரமேஷ், கோயில் செயல் அலுவலர், சிவாச்சாரியார், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: