புதுச்சேரி: புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலையும் கூட்டாக சந்திக்க முடிவெடுத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தின. என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 14 இடங்களில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டது. தன்னிடம் உள்ள 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்க பாஜக நடவடிக்கை எடுத்தன. ஆனால் கூட்டணியில் லஜகவை சேர்க்க ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன செய்வதென தெரியாமல் திகைத்த அமைச்சர் மற்றும் பாஜ நிர்வாகிகள் அவசர, அவசரமாக டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே முதல்வர் ரங்கசாமி சேலம் அப்பா பைத்தியம் சாமி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரையில் தங்கினார். கூட்டணி பேச வருகை தந்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்திக்காமல் அவர் வெளியூர் சென்றதால் தேஜ அணி உடைந்ததாக தகவல் பரவின. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரங்கசாமியை போனில் தொடர்பு கொண்டு பேச, அதுவரையிலும் லெப்ட்… ரைட்… போக்கு காட்டிவந்தவர், அடுத்த சில நிமிடத்தில் சரண்டர் ஆனார். போனில் அமித்ஷா, ரங்கசாமியை லெப்ட், ரைட் என வாங்கியதாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் புதுச்சேரி திரும்பியதும் கதிர்காமம் முருகன் கோயிலில் தனது வேட்புமனு வைத்து வணங்கிய ரங்கசாமி மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பிறகு தனியார் ஓட்டலில் தங்கியிருந்த பாஜ மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கூட்டணியை உடனே உறுதி செய்தார். கடந்த சில மாதங்களாகவே லஜகவுக்கு எதிராக செயல்பட்டு வந்த ரங்கசாமி, அமித்ஷா போனில் பேசிய அடுத்த சில நிமிடத்தில் அந்தர் பல்டி அடித்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பாஜக தன்னிடம் உள்ள 14ல் தலா 2 தொகுதிகளை அதிமுக, லஜகவுக்கு ஒதுக்கியுள்ளது. ஏற்கனவே கடந்தமுறை 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு 2 மட்டுமே கிடைத்துள்ளதால் கடும் விரக்தியில் உள்ளது. புதுச்சேரியிலும் அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ரூ.28 கோடி சொத்து
புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடியில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி வேட்புமனு அளித்துள்ளார். அவர், தனக்கு ரூ.28 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில், மங்கலம் தொகுதியில் முதல்வரை எதிர்த்து முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரியான சத்தியமூர்த்தி போட்டியிட மனு போட்டுள்ளார். புதுச்சேரியை உலுக்கிய போலி மருந்து விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்ட இவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
உத்தேச பட்டியல் வெளியீடு
என்.ஆர்.காங்கிரஸ், பாஜ போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் தட்டாஞ்சாவடி, மங்கலம், திருபுவனை, வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு மற்றும் ஏனாம் ஆகிய தொகுதிகளில் என்.ஆர் காங்கிரசும், ராஜ்பவன், மண்ணாடிப்பட்டு, மணவெளி, காலாப்பட்டு, ஊசுடு, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, திருநாள்ளாறு, நிரவி- திருப்பட்டினம், மாகே ஆகிய தொகுதிகளில் பாஜவும், அதிமுக உப்பளம், முத்தியால்பேட்டை தொகுதிகளிலும், காமராஜ் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளில் லஜகவும் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சந்திர பிரியங்கா மனு தாக்கல்
காரைக்கால் அடுத்த நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதியில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சந்திர பிரியங்கா காரைக்கால் தேர்தல் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல்
செய்தார்.
