ஈரோடு, டிச. 7: ஈரோடு மாவட்டம், கொடுமுடி குள்ளக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜா (30). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள விநாயகர் கோயில் பூசாரி. இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும், குழந்தை இல்லை. இதனால், கோயிலுக்கு வரும் சென்னையை சேர்ந்த சுப என்ற பெண், அவருக்கு தெரிந்தவர்கள் மிகவும் வறுமையில் உள்ளதால் அவர்களது குழந்தையை தத்து எடுத்து வளர்க்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கு யோகராஜா சட்டப்படி குழந்தையை தடுத்து எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி ஆண் குழந்தையை ஒப்படைத்துள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி தத்து எடுத்து வளர்த்து வந்த 3 மாத குழந்தையான தவவர்ஷனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
