மோடி-புடின் சந்திப்பில் முடிவு ரஷ்ய ஆயுத உதிரிபாகங்கள் இந்தியாவில் கூட்டு உற்பத்தி

புதுடெல்லி: இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கிய ஆயுதங்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே கூட்டு உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க பிரதமர் மோடி-அதிபர் புடின் தலைமையிலான உச்சிமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக வந்த ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடியுடன் டெல்லியில் நடந்த 23வது இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இந்த பேச்சுவார்த்தையின் போது ஒட்டுமொத்த இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் முக்கியமாக இடம் பெற்றன. கடந்த அரை நூற்றாண்டுகளாக இந்தியாவின் ராணுவ தேவையில் பெரும் பகுதியை ரஷ்யா நிவர்த்தி செய்து வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான உதிரி பாகங்கள், உபகரணங்கள் அங்கிருந்து கொண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆவது இந்திய ராணுவத்தின் நீண்டகால குறையாக இருந்து வந்தது. இதனால் ரஷ்யாவின் ஆயுதங்களை பராமரிப்பதில் சிரமம் நிலவுகிறது. இதை நிவர்த்தி செய்ய, தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்களின் உபகரணங்கள், உதிரிபாகங்கள் மற்றும் பிற பொருட்களை இந்தியாவிலேயே கூட்டு உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க இருதரப்பும் முடிவு செய்துள்ளதாக உச்சி மாநாட்டின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், பரஸ்பர நட்பு நாடுகளுக்கு உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்வதற்கும் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 4ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்-ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோ இடையேயான சந்திப்பில் இந்தியாவின் போர் திறனை அதிகரிக்க, கூடுதல் எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வாங்குவதில் இந்தியா மிகுந்த ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: