திண்டுக்கல் மாவட்டத்தில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி பயன்பாட்டு திட்டம் துவக்கம் ஒரு நாளைக்கு 500லி சேகரிக்க இலக்கு

திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி பயன்பாடு திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகிக்க, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் தரமான, ஆரோக்கியமான உணவு வகையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சரியான உணவு இயக்கம்- திண்டுக்கல் என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை வளாக உணவகங்களில் தரமான, பாதுகாப்பான, சத்தான உணவு பொருட்களின் விநியோகத்தினை உறுதி செய்தல், அறநிலையத்துறை- தனியார் வழிபாட்டு தலங்களில் நடக்கும் அன்னதானம், பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்துதல், வணிக ரீதியான உணவு தயாரிப்பு கூடங்களில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயினை திரும்ப, திரும்ப பயன்பாடு செய்வதை தடுத்து நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்காத பண்டங்களை விற்பனை செய்யவும், சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு பயோ டீசல் தயாரித்திட வணிகர்களை ஊக்குவித்தல், பொதுமக்கள், மாணவர்களிடம் உணவு பாதுகாப்பு- தரம் தொடர்பாக சட்ட வழிகாட்டுதல், விழிப்புணர்வு கல்வி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

குறிப்பாக கடைகளில் சமையல் எண்ணெய்யை சுத்திகரித்து பயோ டீசலாக மாற்றி பயன்படுத்தும் திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம், கடைகளுக்கே சென்று நேரடியாக கொள்முதல் செய்யப்படும். ஒரு கிலோ எண்ணெய் ரூ.25க்கு பெற்று கொள்ள உள்ளனர். இவ்வாறு கடைகளில் சேகரிக்கப்படும் எண்ணெய் லாரிகள் மூலம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பயோ டீசலாக மாற்றப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் எண்ணெய் சேகரிக்கப்படவுள்ளது. இதனை படிப்படியாக அதிகரித்து 5000 லிட்டர் எண்ணெய் வரை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு வணிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்றார். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன், நகர் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: