சென்னை: சென்னைக்கு 510 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ என பெயரிடப்பட்டு உள்ளது. ஏமன் நாடு இந்த பெயரை பரிந்துரைத்திருக்கிறது. இந்த புயல் காரணமாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று அதி பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு 510 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ. தெற்கு தென் கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்த டிட்வா புயலின் வேகம் 3 கி.மீ.ஆக குறைந்தது. இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வரும் 30ம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
