வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவம் 73 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன

*ஈரோடு கலெக்டர் கந்தசாமி தகவல்

ஈரோடு : வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக, மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நிருபர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தால் 27.10.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 04.11.2025 முதல், மொத்தமுள்ள 2222 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இல்லந்தோறும் சென்று உரிய வழிகாட்டுதலுடன் கணக்கெடுப்பு படிவமானது, மாவட்டத்தில் 19.97 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 14 லட்சம் வாக்காளர்களிடம் படிவம் திரும்ப பெற்றப்பட்டுள்ளது.

தற்போது கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ள வாக்காளர்களிடம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட 8,23,876 கணக்கெடுப்பு படிவங்களை திரும்பபெற்று அதன் விவரங்கள் பிஎல்ஓ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளானது வரும் 4ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து பிஎல்ஓ அல்லது பிஎல்ஓ-2 ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும் கூடுதல் உதவி மையம் அமைக்கப்பட்டு படிவங்கள் பெறப்பட்டதில் ஈரோடு மாவட்டத்தில் 73 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் வரப்பெற்ற 47 புகார்கள் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பான 155 சந்தேகங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட இலவச தொடர்புமையம் (1950) மூலம் வரப்பெற்ற 232 புகார்களில் 163 புகார்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 69 புகார்களில் நடவடிக்கை தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முனைப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இப்பணி தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், பொதுமக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மேலும், சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய அளவில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

கணக்கீட்டு படிவங்களை வழங்க டிசம்பர் 4ம் தேதி இறுதி நாளாகும். இருப்பினும் வரும் 30ம் தேதிக்குள் படிவங்கள் பெறும் பணியை முடிக்க உள்ளது. அந்த கணக்கிட்டு படிவங்களை முறையாக பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள உதவி மையத்திலோ பொதுமக்கள் தொடர்புகொண்டு தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து தங்களது புதிய புகைப்படத்தை ஒட்டி கொடுக்க வேண்டும்.

வரக்கூடிய 2025 டிசம்பர் 9ம் தேதி வரக்கூடிய வாக்காளர் வரைவு பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற செய்யப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்து, பிப். 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும், இப்படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகங்கள் ஏதுமிருப்பின் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கைபேசி எண்களில் தொடர்புகொண்டோ அல்லது மாவட்ட உதவி மையம்/ தொகுதி வாரியாக பின்வரும் உதவி மைய எண்களை தொடர்புகொண்டோ தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு தங்களது படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பிஎல்ஓ அல்லது பிஎல்ஓ-2 ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் ஜனநாயக பணி. அதனால் அரசு அரசியல் கட்சிகளை கடந்து, மக்களும் தங்களது கடமையாக உணர்ந்து கணக்கெடுப்பு படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, உதவி மைய எண்களை மாவட்ட கலெக்டர் கந்தசாமி வெளியிட்டார்.

அதன்படி, மாவட்ட இலவச தொடர்பு மையம்- 1950, மாவட்ட உதவிமைய எண் (வாட்ஸ்ஆப்) 90425 80535, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி- 0424 2251618, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி- 0424 2254224, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி- 0424 2500123, பெருந்துறை சட்டமன்ற தொகுதி- 04294 220577, பவானி சட்டமன்ற தொகுதி- 04256 230334, அந்தியூர் சட்டமன்ற தொகுதி- 04256 260100, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி- 04285 222043, பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதி- 04295 220383 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, தேர்தல் வட்டாட்சியர் சங்கர் கணேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: