பிட்ஸ்

* கபடி சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு
புதுடெல்லி: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த உலகக்கோப்பை கபடி போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றிய இந்திய மகளிர் அணி, விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போட்டிகளின்போது பல வீராங்கனைகள் காயமடைந்தனர். இந்திய அணி கேப்டன் ரிது நெகியும் காயமடைந்து சிகிச்சை பெற்று நேற்று திரும்பினார். அவர் கூறுகையில், ‘13 ஆண்டு இடைவெளிக்கு பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது’ எனக் கூறினார்.

* என் எதிர்காலத்தை பிசிசிஐ முடிவு செய்யணும்: காம்பீர்
தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியை தழுவிய நிலையில், இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: நான் தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டுமா என்பதை பிசிசிஐதான் முடிவு செய்ய வேண்டும். இதை ஏற்கனவே நான் கூறியுள்ளேன். இந்திய கிரிக்கெட்தான் முக்கியம். நான் அல்ல. இதற்கு முன் இங்கிலாந்திலும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் வெற்றி பெற்றுத்தந்தவன் நான். இந்திய அணியின் தோல்விக்கு, அணியில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்பு. அந்த பழி என்னில் இருந்து துவங்குகிறது. தனி நபர்களை நான் எப்போதும் குறை கூற மாட்டேன்’ என்றார்.

* 31 பந்தில் 100 உர்வில் அசத்தல்
ஐதராபாத்: சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிகள் நேற்று துவங்கின. ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியில் சர்வீசஸ் அணி – குஜராத் அணியும் மோதின. முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து 182 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணியின் கேப்டன் உர்வில் படேலும், ஆர்யா தேசாயும், சர்வீசஸ் அணி பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினர். உர்வில் படேல் 31 பந்துகளில் சதம் விளாசினார். 37 பந்துகளில் அவர், 10 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 119 ரன் குவித்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியை சேர்ந்தவரான உர்வில் படேலின் அதிரடி ஆட்டத்தால், குஜராத் 2 விக்கெட் இழந்து 183 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

* ரொனால்டோவுக்கு தடை நீக்கம்
லண்டன்: போர்ச்சுகல் கால்பந்தாட்ட அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40), சமீபத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஆடியபோது, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மேலும், அடுத்த 3 போட்டிகளில் ஆட அவருக்கு தடை விதிக்கப்பட்டதால், ஃபிபா உலகக் கோப்பை தகுதி போட்டியில் அவர் ஆட முடியாத நிலை உருவானது. இந்நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட தடையில் பகுதியளவு தளர்த்தப்பட்டது. அதன்படி, இரண்டு போட்டிகள் மீதான தடை விலக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு போட்டியில் ஆட மட்டுமே அவருக்கு தடை இருந்தபோதும், அவர் இல்லாமல், ஆர்மீனியா அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் ஆடியுள்ளதால், அடுத்து வரும் போட்டியில் ரொனால்டோ ஆட முடியும். இதையடுத்து, ஃபிபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட தகுதி போட்டியில் ரொனால்டோ ஆட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: