கற்பூரம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் பக்தர் படுகாயம் திருவண்ணாமலையில் பரபரப்பு அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில்

திருவண்ணாமலை, நவ.27: திருவண்ணாமலை ராஜகோபுரம் எதிரே கற்பூரம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் பக்தர் படுகாயம் அடைந்ததால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உட்பிரகாரங்களில் கற்பூரம் ஏற்ற அனுமதி இல்லை. எனவே, கோயிலுக்கு வெளியே தேரடி வீதியில் ராஜகோபுரம் எதிரே பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்தப் பகுதியில் கற்பூரம் ஏற்றுவதால், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அதற்கென தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கிரிவலம் செல்லத் தொடங்கும் முன்பு, அனுமதிக்கப்பட்ட இடத்தையும் கடந்து பல்வேறு பகுதிகளில் கற்பூரத்தை ஏற்றிவிட்டு பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில், ராஜகோபுரம் எதிரில் உள்ள சக்கரை தீர்த்தம் அருகே நேற்று பெண் பக்தர் ஒருவர் கற்பூரம் ஏற்றினார்.

அப்போது, அங்கு கூட்டம் நெரிசல் இருந்தது. இதற்கு இடையே நுழைந்து கற்பூரத்தை ஏற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக பெண் பக்தரின் சேலையில் கற்பூர தீப்பற்றிக் கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் குபீரென தீ பற்றி எரிந்ததால், அவரது கைகள், கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக, அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து காப்பாற்றினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை கோயிலுக்கு எதிரே கற்பூரம் ஏற்றும்போது ஏற்பட்ட தீ விபத்தில், பெண் பக்தர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: