மாநில ஜூனியர் பெண்கள் கபடி போட்டி: திருநெல்வேலியை வீழ்த்தியது ஈரோடு அணி

 

திருச்சி, நவ.25: திருச்சியில் நடந்த தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஸ் கபடி போட்டியில் ஈரோடு அணி முதல் பரிசை வென்றது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் 51வது சாம்பியன்ஸ் கபடி போட்டி, திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக நடந்தது. ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட அமெச்சூர் கபாடி கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர். இப்போட்டிகளில் 36 மாவட்டத்தை சேர்ந்த 576 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளின் இறுதிச்சுற்றில் திருநெல்வேலி-ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே நடந்தது.

இப்போட்டியில் 33 புள்ளிகளை பெற்று ஈரோடு மாவட்ட அணி முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது. 12 புள்ளிகளை பெற்று திருநெல்வேலி மாவட்ட அணி இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளி பதக்கமும் மற்றும் கோப்பையையும் பெற்றது. இப்போட்டிகளில் விளையாடிய முதல் மூன்று இடத்தை பெற்ற அணிகளில் இருந்து 30 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் 14 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்கள் கபடி பிரிவில் ஈரோடு மாவட்டம் முதல் பரிசை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றிபெற்ற அணியினருக்கு ரொக்க பரிசு, வெள்ளி கேடயம் மற்றும் சான்றிதழ்களை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில செயலாளர் சபியுல்லா, நீரோ ஒன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் தங்க நீலகண்டன், செயலாளர் வெங்கடசுப்பு, செலக்சன் கமிட்டி உறுப்பினர் தனா சதீஷ், இன்ஸ்பெக்டர் மணிமாறன், அகில இந்திய நடுவர் தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: