நடப்பு ஆண்டுக்கான தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி, டிச.18: நடப்பு ஆண்டுக்கான தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அறிவிப்பை தொடர்ந்து, திருச்சி மாவட்ட விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என திருச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,
தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைமையகத்தில் நடப்பு ஆண்டிற்கான விரைவு தட்கல் திட்டத்தின் கீழ், விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என டிச.15 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மற்றும் தற்போது பதிவு செய்யவுள்ளவர்களுக்கும் மின் பளுவின் தேவைக்கேற்ப விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். இதற்காக 5HP வரை மின் பளு பயன்படுத்துவோர் ரூ.2.5 லட்சமும், 5HPக்கு மேல் 7.5HP வரை பயன்படுத்துவோர் ரூ.2.75 லட்சமும், 7.5 HP மேல் 10 HP வரை பயன்படுத்துவோர் 3 லட்சமும், 10HP மேல் 15HP வரை பயன்படுத்துவோர் 4 லட்சமும் இத்திட்ட தொகையாக செலுத்த வேண்டும். ஏற்கனவே மின் இணைப்பு கோரி பதிவு செய்த விவசாயிகள் தட்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பை பெற சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை உடனே தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: