கவுகாத்தி: கவுகாத்தியில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்து ஆட்டமிழந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா தோற்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டி, கவுகாத்தியில் கடந்த 22ம் தேதி துவங்கியது.
முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா அணியின் வீரர்கள் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தை பூர்வீகமாக கொண்ட தென் ஆப்ரிக்கா வீரர் செனுரன் முத்துசாமி அட்டகாசமாக ஆடி, 2 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
மேலும், கைல் வெரெய்ன் 45 ரன்களும், மார்கோ யான்சன், 7 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 93 ரன்களும் விளாச, 151.1 ஓவரில் தென் ஆப்ரிக்கா 489 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது சிராஜ் தலா 2, விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதையடுத்து, இந்திய அணியின் துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் முதல் இன்னிங்சை துவக்கினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 7, ராகுல் 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
