மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம்

ஈரோடு,  ஜன. 7: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு இதுவரை பள்ளிகள்  திறக்கப்படவில்லை. இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு  படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டி உள்ளது.

இதனால்,  பள்ளிகள் திறக்க அரசும், பள்ளிக்கல்வித்துறையும் திட்டமிட்டு வருகிறது.  இதற்காக அனைத்து மாவட்டத்திலும் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம்  கருத்து கேட்பு கூட்டம் நடத்திட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிட்டிருந்தார்.  இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்  தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று முதல்  துவங்கப்பட்டது. இதில், மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோரை அழைத்து வந்து  கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்க வைத்தனர்.    இதில், ஈரோடு  காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்து  கேட்பு கூட்டத்திற்கு வந்த பெற்றோர்களிடம் பள்ளிகள் திறக்கலாமா?, வேண்டாமா?  என எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினர். திறக்கலாம் என்றால் அதற்கு உண்டான  காரணங்கள், திறக்க வேண்டாம் என்றால் அதற்கு உண்டான காரணங்களும்  பெறப்பட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டம் வரும் 8ம் தேதி வரை நடைபெறும் என  பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: