ராமேஸ்வரம் கோயிலில் மார்கழி அஷ்டமியில் சுவாமி அம்பாள் உலா

ராமேஸ்வரம், ஜன.7:  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி அஷ்டமியான நேற்று கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி அம்பாள் உலா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், பின் சுவாமி அம்பாள் சன்னதியில் வழக்கமான கால பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மார்கழி மாத அஷ்டமி நாளில் சுவாமி, அம்பாள் நகர வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பதும் வழக்கம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழா மற்றும் அன்றாட சுவாமி உலாவும் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் நேற்றும் அஷ்டமி நாளில் கோயிலுக்கு வெளியில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறாமல், கோயில் மூன்றாம் பிரகாரத்திற்குள்ளேயே நடைபெற்றது.

திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று யோக பைரவர் சன்னதியில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளையும், வேண்டுதலையும் பூசணிக்காய், தேங்காய்களில் விளக்கேற்றியும் மற்றும் நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். பகல் 12 மணியளவில் யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தெர்டர்ந்து யோக பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: