ஒவ்வொரு ஆண்டும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து கடந்தாண்டு 136 பேர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 87 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில், 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது. 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி பிரதானத் தேர்வில் நாடு முழுவதும் 2,736 பேர் தேர்வாகியுள்ள நிலையில், அவர்கள் அடுத்தக்கட்டமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்காணலுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகள். யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 87 பேர் அரசு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்பதில் பெருமைப்படுகிறோம். அரசு பயிற்சி மையங்கள் மற்றும் நான் முதல்வன் திட்ட குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: