வீடுகளில் நகை திருடிய ஆசாமி போலீசில் சிக்கினான்

தஞ்சை, ஜன.5: தஞ்சையில் பல்வேறு இடங்களில் நகை திருடிய சென்னையை சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்தனர். அவர் சுமார் 150 பவுன் திருட்டு நகைகளை வியாபாரிகளிடம் விற்றுவிட்டதாக கூறியதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு எஸ்ஐக்கள் சந்திரசேகரன், டேவிட் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று தஞ்சையில் சந்தேகப்படும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், தஞ்சையில் தங்கியிருந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து வீடுகளில் திருடிய நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது அவர், திருடிய நகைகளை 2 நகை வியாபாரிகளிடம் விற்றுவிட்டதாக தெரிவித்தார்.

அவர்களில் ஒரு வியாபாரியை நேற்றுமுன்தினம் மதியம் போலீசார் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் மற்றொரு வியாபாரியை பிடிக்க தனிப்படை போலீசார் சம்பவத்தன்று  இரவு தஞ்சை சீனிவாசபுரம் திருநகர் பகுதியில் உள்ள நகை வியாபாரியின் வீட்டிற்கு சென்றனர். இதை அறிந்த நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் சம்பவ இடத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். இதுபற்றி தனிப்படை போலீசார் கூறுகையில், பல்வேறு வீடுகளில் திருடிய நபரை பிடித்துள்ளோம். அவன் திருடிய 150 பவுன் நகையை வியாபாரிகளிடம் விற்றுள்ளான். அவற்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

Related Stories: