ஜவுளி, துணி விற்பனை நிறுவனங்கள் நூல் விலை உயர்வை கண்டித்து 6ம் தேதி ஸ்டிரைக்

ஈரோடு, ஜன. 4: நூல் விலை உயர்வை கண்டித்து வருகின்ற 6ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த ஈரோடு ஜவுளி, துணி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பர சரவணன் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக பஞ்சு விலை, அதிகபட்சமாக 10 சதவீதம் கூட உயரவில்லை. ஆனால், நூல் விலை 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அடிக்கடி உயரும் நூல் விலைக்கு ஏற்ப துணி விலையை உயர்த்தி விற்க முடியவில்லை.

40ம் நம்பர் வார்ப் நூல் ஒரு கோன் கடந்த மாதம் ரூ.195 ஆக இருந்தது. தற்போது ரூ.235 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல காரணம் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ரக நூல் அதிகமாக உற்பத்தி செய்வதுடன், அவற்றை அதிகமாக ஏற்றுமதியும் செய்கின்றனர். பிற ரக நூலை தேவைக்கு குறைவாக உற்பத்தி செய்து, செயற்கையான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மாத மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நூல் விலை உயர்த்தப்பட வேண்டும்.

இதை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வருகின்ற 6ம் தேதி ஈரோடு மாவட்ட ஜவுளி, துணி விற்பனை நிறுவனங்கள், கடைகள், குடோன் போன்றவை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். மாவட்ட அளவில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடும். இவ்வாறு கூறினார்.

Related Stories: