புத்தாண்டு பிறப்பையொட்டி ஆண்டாள் கோயிலில் 30 ஆயிரம் பேர் தரிசனம்

திருவில்லிபுத்தூர், ஜன. 4: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இக்கோயிலின் கோபுரம், தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. பெருமாளை அடைய மார்கழி மாதத்தில் ஆண்டாள் விரதமிருந்தார். எனவே, மார்கழி மாதத்தில் ஆன்டாள் கோயிலில் தரிசனம் செய்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை புத்தாண்டு விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை என தொடர் விடுமுறையால் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் குழு, குழுவாக பஜனை பாடியும், கோலாட்டம் ஆடியும் சாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து ஆண்டாள் கோயில் பணியாளர் ஒருவர் கூறுகையில், ‘பொதுவாக மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமானோர் வருவர். கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர். புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமையன்று 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்’ என்றார்.

Related Stories: