தமிழ்நாடு அணியுடன் ரஞ்சி கிரிக்கெட்: விதர்பா 501 ரன் குவிப்பு; 210 ரன் முன்னிலை பெற்றது

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நேற்று, தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் விதர்பா அணி 501 ரன் குவித்து, 210 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப் ஏ பிரிவில் தமிழ்நாடு – விதர்பா அணிகள் இடையிலான 4 நாள் போட்டி கடந்த 1ம் தேதி துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் முதல் இன்னிங்சை ஆடிய விதர்பா அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்திருந்தது. துருவ் ஷோரி 80 ரவிகுமார் சமர்த் 24 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3ம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை விதர்பா வீரர்கள் தொடர்ந்தனர்.

துருவ் ஷோரி மேலும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரவிகுமார் சமர்த் 56 ரன்களுக்கு வீழ்ந்தார். பின் வந்த யாஷ் ரத்தோட் அற்புதமான ஆட்டத்தை அரங்கேற்றி 133 ரன் குவித்து பெவிலியன் திரும்பினார். அக்சய் வாத்கர் 43, பார்த் ரெகாடே 21 ரன்னில் அவுட்டாகினர். 148.4 ஓவரில் விதர்பா அணி, 501 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அதன் மூலம், அந்த அணி 210 ரன்கள் முன்னிலை பெற்றது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை பறித்தார். திரிலோக் நாக் 3, சந்திரசேகர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 2வது இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. அதனால், தமிழ்நாடு 204 ரன்கள் பின்தங்கி இருந்தது.

Related Stories: