ரூ.3.50 கோடி தொழில் வரி நிலுவை வணிக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க சிறப்புக்குழு அமைப்பு

தஞ்சை, டிச. 31: தஞ்சை மாநகராட்சியில் வணிக நிறுவனங்களிடமிருந்து தொழில் வரியாக ரூ.3.50 கோடி நிலுவை உள்ளதால் வசூல் செய்ய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாநகராட்சி எல்லைக்குள் தொழில் செய்யும் அரையாண்டு வருமானம் ரூ.21 ஆயிரத்துக்கும் மேல் உள்ள வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மாநகராட்சி சட்டம் மற்றும் தொழில் வரி சட்டத்தின்படி ஒவ்வொரு அரையாண்டும் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்த கடமைப்பட்டவர்கள். இந்த தொழில்வரி என்பது சம்பந்தப்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் குறிப்பிட்ட அரையாண்டு காலத்தில் தொழில் செய்துள்ளனர் என்பதற்கு சான்றாகும். இந்த தொழில் வரியை செலுத்தும் தனிநபர்கள், நிறுவனங்கள் தாங்கள் செலுத்தும் தொழில் வரியை ஆண்டு வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது வருமானத்தில் கழித்து கொள்ளவும் வழிவகை உள்ளது. மேலும் வங்கியில் கடன் பெறுவதற்கும், பல்வேறு உரிமங்கள் பெறுவதற்கும் இந்த தொழில்வரி ரசீதை ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் சில வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில்வரி இனங்களை உரிய காலத்தில் செலுத்த தவறியதால் நிலுவையில் ரூ.2.91 கோடியும், நடப்பில் ரூ.62 லட்சமும் தொழில் வரியாக நிலுவை ஏற்பட்டுள்ளது. இதை அதிரடியாக வசூல் செய்ய மாநகராட்சியில் வருவாய் அலுவலர், வருவாய் உதவியாளர்களை கொண்டு சிறப்பு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குழுவினர் தங்கள் கடைகள், நிறுவனங்களுக்கு வரும்போது ஒத்துழைப்பு அளித்து வரியை செலுத்த கேட்டு கொள்ளப்படுகின்றனர். மேலும் தனியார் மருத்துவர்கள், பட்டய தணிக்கையாளர்களும் தொழில் வரி செலுத்த கடமைப்பட்டவர்.

இதுவரை தொழில்வரி விதிப்பு செய்யப்படாத தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பித்தால் 24 மணி நேரத்துக்குள் தொழில் வரி விதிப்பு செய்யப்படும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: