3வது ஓடிஐயில் ஆடியபோது விபரீதம்: ஷ்ரேயாஸ் ஐயர் ஐசியுவில் அட்மிட்; விலா எலும்பில் காயத்துக்கு தீவிர சிகிச்சை

புதுடெல்லி: இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளர். இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் ஆடி வருகிறது. கடந்த 25ம் தேதி நடந்த 3வது ஒரு நாள் போட்டியின்போது, ஆஸி வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, இந்திய அணி துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பிடித்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அவர் டிரெஸ்ஸிங் அறையில் இருந்தபோது மயங்கி விழுந்ததால் இந்திய அணி மருத்துவர் உடனடி சிகிச்சை அளித்தார்.

இந்நிலையில், சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஐசியு பிரிவில் ஷ்ரேயாஸ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் ரத்தக் கசிவு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தவிர, விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால், மண்ணீரல் பகுதியிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்கேனில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிசிசிஐ மருத்துவக்குழு, இந்தியாவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, ஷ்ரேயாஸ் ஐயரின் உடல் நிலையை கண்காணித்து வருகிறது. இந்திய அணிக்கான பிரத்யேக மருத்துவர், ஷ்ரேயாஸ் ஐயர் கூடவே இருந்து அவரது உடல் நிலை முன்னேற்றத்தை கவனிப்பார். அவரது உடல் நிலை தற்போது சீராக உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: