புத்தாண்டையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

கோவை, டிச. 31: ஆங்கில புத்தாண்டு நாட்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் வரும் 31-ம் தேதி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாடட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் இளைஞர்கள் பலர் புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர். இவர்கள், பொதுவாக நள்ளிரவில் பைக் ரேஸ், பட்டாசுகளை வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடுவார்கள். மேலும், குடும்பத்துடன் புத்தாண்டு தினத்தன்று பலர் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

இந்த கொண்டாட்டத்தின்போது, விபத்து உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக்கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டவர்களுக்கு விரைந்து  சிகிச்சை அளிக்க ‘ஜூரோ டிலே’ என்ற சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, காயம் ஏற்பட்டு வரும் நபர்களுக்கு உடனடியாக  சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் ஆகிய வசதிகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மருத்துவமனையின் டீன் காளிதாஸ் தெரிவித்தார்.

Related Stories: