கொரோனா பரவல் அபாயம் பவானிசாகர் அணை, கொடிவேரி பூங்கா இன்று முதல் மூடல்

ஈரோடு, டிச.31:  கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பவானிசாகர் அணை பூங்கா, கொடிவேரி அணை பூங்கா இன்று மாலை முதல் 2ம் தேதி வரை மூடப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா தலமான கொடிவேரி பூங்கா மற்றும் பவானிசாகர் பூங்கா இன்று மாலை முதல் 2ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களுக்கும் பொதுமக்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அரசு எடுத்து வரும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: