கே.வி.குப்பம் அருகே நேற்று காலை 2 பேர் கைது

வேலூர், டிச.28: கே.வி.குப்பம் அருகே ஆந்திராவுக்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இரு ஆட்டோக்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு தினந்தோறும் பல்வேறு வழிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை போலீசாரும், மாவட்ட வழங்கல் துறையும் தொடர்ந்து ரெய்டு நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கே.வி.குப்பம் அருகே லத்தேரி பனமடங்கி, பள்ளத்தூர் வழியாக கொட்டாளம் வனத்துறை சோதனைச்சாவடி கடந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பரதராமி போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பரதராமி எஸ்ஐ ஏழுமலை, ஏட்டு பாலாஜி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரு ஆட்டோக்களை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோக்களை ஒட்டி வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலூர் மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (35), காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த சிவாஜி(51) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு டன் ரேஷன் அரிசியுடன் இரு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: