அரசு பள்ளி முன்பு மண் கொட்டி வழித்தடம் அடைப்பு

நாமக்கல், அக்.14: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள ஆண்டாபுரத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி அருகில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலம் இருக்கிறது. அதன் வழியாக மாணவ, மாணவிகள், விவசாயிகள் சென்று வரும் வகையில், வழித்தடம் இருந்தது. இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை மூலம், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்த நபர், அந்த வழித்தடத்தில் மண்ணை கொட்டி அடைத்துவிட்டார்.

இதன் காரணமாக, அவ்வழியாக பள்ளிகளுக்கும், விவசாய தோட்டங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், நேற்று மாலை பள்ளியின் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வளையப்பட்டி – காட்டுப்புத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மோகனூர் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அலுவலர்கள், அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, வழித்தடத்தை மறித்து கொட்டப்பட்ட மண், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: