விஜயமங்கலம் டோல்கேட்டை முற்றுகையிட முயற்சி; 20பேர் கைது

பெருந்துறை, டிச. 27:  வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விஜயமங்கலம் சுங்கச்சாவடியை (டோல்கேட்) முற்றுகையிட முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் 20 பேரை போலீசார்  கைது செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி  இன்று தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சோதனை சாவடியை (டோல்கேட்) முற்றுகையிடுவதற்காக, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் சாஜாகான் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை டிஎஸ்பி., செல்வராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் சுங்க சாவடி அருகே ஒன்றுதிரண்டு வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு, முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Related Stories: