சென்னை: காங்கிரஸ் கூட்டத்திலும் த.வெ.க கொடி பறக்கிறது என்றும், விஜயுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு காண்கிறார் என்றும் செல்வப்பெருந்தகை கூறினார். முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாள், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் பக்தவத்சலம். பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு தமிழகத்தை திறம்பட ஆட்சி செய்தவர். அவருக்கு புகழ் வணக்கம் செலுத்துவதில் காங்கிரஸ் பெருமை அடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமான வளர்ச்சி பணிகளை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதில் மாவட்ட நிர்வாகத்துடன் சுணக்கம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. கீழ்நிலை அதிகாரிகள் ஆய்வு செய்து தான் கோப்புகளை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்புகிறார்கள். அப்படி இருந்தும் ஒப்புதல் அளிப்பதில் ஏன் தாமதம் செய்கிறார்கள். இது அரசுக்கு தான் கெட்டப் பெயரை ஏற்படுத்தும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கிறார். அதிகாரிகள் இவ்வாறு செயல்படுவது தவறு. காஞ்சிபுரம் மாவட்டம் அல்ல எல்லா மாவட்டங்களிலும் கோப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டத்தில் த.வெ.க கொடியுடன் சிலர் கலந்து கொண்டதாகவும், இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.
அவர் காண்பது கூட்டணி கனவு. அது பகல் கனவாக தான் இருக்கும். காங்கிரஸ் கூட்டத்திலும் த.வெ.க கொடி பறக்கத் தான் செய்கிறது. அதற்காக நாங்களும் கூட்டணி கனவு காண முடியுமா? இவ்வாறு அவர் கூறினார். நிகழ்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராபர்ட் புரூஸ், விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், மாநில துணைத் தலைவர்கள் கே.வி.விஜயன், பொன் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், டி.என்.அசோசன், அகரம் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
