அரியலூரில் மாநில அளவில் நடந்த பெண்களுக்கான கபடி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணி சாம்பியன்

மன்னார்குடி, டிச.27: அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 17 வயதிற் குட்பட்ட மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்றது. இதில், திருவாரூர், தஞ்சை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, திருநெல்வேலி, விழுப்புரம், அரியலூர், விருதுநகர் உள்ளிட்ட 32 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தன .

இந்நிலையில் கடந்த 24ம்தேதி நடந்த அரையிறுதி போட்டிகளில் திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி அணி ஈரோடு மாவட்ட அணியையும், நாமக்கல் மாவட்ட அணி திருநெல்வேலி மாவட்ட அணியையும் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டி நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி அணி, நாமக்கல் மாவட்ட அணியை 32 க்கு 30 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் சாம்பியன் பெற்ற கட்டக்குடி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி மாணவிகளையும், அணியின் பயிற்சியாளர் உதயகுமாரையும் திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜராஜேந்திரன், துணைத் தலைவர் வடுவூர் கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர் வேலுமணி, பள்ளி தலைமையாசிரியர் அருள் ஆரோக்கியம் பேட்ரிக் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

Related Stories: