பேரணாம்பட்டு, அக்.4: பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஆட்டுக்குட்டியை சிறுத்தை கவ்விச்சென்று கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர் உள்பட வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் யானைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த மதிமா என்பவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வனப்பகுதியில் மேய்த்துவிட்டு வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது, புதர் மறைவில் இருந்த சிறுத்தை திடீரென ஒரு ஆட்டுக்குட்டியை கவ்விக்கொண்டு ஓடியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மதிமா, கூச்சலிட்டவாறு மற்ற ஆடுகளை ஓட்டி வந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் வனப்பகுதியில் தேடியபோது அங்குள்ள விவசாய நிலத்தில் ஆடு கழுத்தில் கடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வனப்பகுதியை ஒட்டி யானைகள், சிறுத்தைகள் நடமாடி வருகிறது. விலங்குகளை இரவு, பகலாக வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணித்து, அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு பொதுமக்கள் ஓட்டிச்செல்ல வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும்’ என்றனர்.
