வேலூர், செப்.27: 2025-26ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை திருத்தம் முதல் அனைத்தையும் மேற்கொண்டு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று சிஇஓக்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவுறுத்தியள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநரகம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2025-2026ம் ஆண்டு மார்ச்சில் நடைபெறும் பிளஸ்2 2ம் ஆண்டு பொதுத்தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல், 2025ம் ஆண்டு பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படவுள்ளது. அனைத்து மேல்நிலை பள்ளித்தலைமையாசிரியர்களும் ‘dgeapp.tnschools.gov.in’ என்ற இணையதள முகவரிக்கு சென்று, அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ் வேர்டை பயன்படுத்தி, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நிரந்தரப்பதிவெண், பெயர், பிறந்த தேதி பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட பட்டியலில், தங்கள் பள்ளியில் பிளஸ்2 பயிலும் மாணவர்களது பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின், அதன் விவரங்களை 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைத்து வரும் 3ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். புதுச்சேரி மாநில பள்ளி தலைமையாசிரியர்கள் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட இணை இயக்குநர் அலுவலகம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வரும் 3ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின்னர் அரசிதழில் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டும் 10ம் வகுப்பு சான்றிதழில் உள்ளவாறு இல்லாமல் அரசிதழில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வகை மாணவர்களது பெயர் திருத்தம் கோர அரசிதழின் நகலை கண்டிப்பாக (புதுச்சேரி மற்றும் காரைக்கால் மட்டும் சம்பந்தப்பட்ட இணை இயக்குநர் அலுவலகம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில்) மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாணவரது பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அம்மாணவரின் பெயர்ப்பட்டியல் பக்கத்தில் திருத்தங்கள் குறித்த விவரங்களை குறிப்பிட்டு தலைமையாசிரியரின் கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
2024-2025ம் கல்வியாண்டிற்கு முன்னர் பிளஸ்1 பயின்று பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, பெறாமல் இடைநின்று தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து பிளஸ்2 பயின்று வரும் மாணவர்களின் பெயரை நடைபெறவுள்ள பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான பெயர்ப்பட்டியலில் சேர்க்க, தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் அலுவலகத்தில், அம்மாணவரது பிளஸ்1 மதிப்பெண் பட்டியல், தற்போது பிளஸ்2 பயிலும் பள்ளியின் எண், பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் வரும் 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
