மதுரை: ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடரை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை, மதுரையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 29 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் மதுரையில் உள்ள ஹாக்கி மைதானத்தை சீரமைத்து, புதிய உலகத் தரம் வாய்ந்த நவீன ஹாக்கி மைதானமாக மாற்றவும் சென்னையில் உள்ள ஹாக்கி மைதானத்தை புதிய வசதிகளுடன் நவீனப்படுத்தவும் தமிழ்நாடு அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ஹாக்கி மைதானம் ரூ.9.47 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து உலகத் தரத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்ட பாரா விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட ரூ.25 கோடி மதிப்பிலான விளையாட்டு மைதான பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்எல்ஏ மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்காக போட்டி விழா ஏற்பாடு, மைதானம் சீரமைத்தல், கேலரி உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை செய்வதற்காக தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார்.
