திருவனந்தபுரம்: சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு பம்பையில் நேற்று சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஒரு நாள் மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தனித்துவமான ஒரு ஐதீகம் உள்ளது. அது சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையதாகும். சபரிமலை வேறுபாடுகளுக்கும், பாரபட்சங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தலமாகும்.
மதத்திற்கு அப்பாற்பட்ட புனித தலமான இந்தக் கோயில் மனிதர்கள் யாராக இருந்தாலும் வந்து செல்லக்கூடிய ஒரு இடமாகும். இந்த புனித தலத்திற்கு நாம் வலிமை சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்களை இங்கு கொண்டு வந்து ஒன்றிணைத்துள்ளோம். பக்தர்களின் கருத்துக்களை கேட்டு சபரிமலையில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற தீர்மானித்துள்ளோம். ரூ.1000 கோடிக்கான சபரிமலை மாஸ்டர் பிளான் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் அதற்காக நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
