வடபழனியில் 2ம் கட்ட மெட்ரோ பணி விறுவிறுப்பு 2 மாதத்தில் முடிக்கப்பட்ட பிரமாண்ட தூண்கள்: கடினமான வேலையை மிகக் குறைந்த நேரத்தில் முடித்து சாதனை

 

சென்னை: போக்குவரத்து நெரிசல் மிகுந்த வடபழனியில் 1200 டன் கொண்ட 2 மெகா தூண்கள் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4 அமைக்கும் பணியின் போது, வடபழனியில் ஒரு முக்கியமான பொறியியல் சவாலை எதிர்கொண்டது. ஏனெனில், இந்த புதிய வழித்தடம் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டத்தின் வழித்தடம் 2ஐ கடந்து செல்கிறது.
ஏற்கனவே, இந்த பகுதியில் பரபரப்பான மேம்பாலமும், செயல்பாட்டில் உள்ள உயர்த்தப்பட்ட மெட்ரோ ரயில் பாதையும் உள்ளன.

இந்த சூழலில், வடபழனியில் வழித்தடம் 4ஐ ஒருங்கிணைக்க, மூன்றாவது மட்டத்தில் புதிய மேம்பாலம் ஒன்று அமைக்க வேண்டியிருந்தது. மின்சார பாதைகளுக்கு தேவையான உயர இடைவெளி விடுவது இங்கு மிக அவசியம்.
முதல்கட்ட வழித்தடத்தின் 45 மீட்டர் நீளமுள்ள பாலத்தை கடந்து செல்வது மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் ஏற்கனவே இயங்கும் மெட்ரோ ரயில் பாதை காரணமாக, வழக்கமான கிரேன் முறையைப் பயன்படுத்தி கட்டுமானப் பொருட்களை மேலே ஏற்றுவது சாத்தியமில்லை என்பதால், லாஞ்சிங் கிர்டர் என்ற சிறப்பு முறை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம், பிரமாண்டமான யூ கிர்டர்ஸ் என்ற பாலத்தின் பகுதிகள் பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் நிறுவப்பட்டன. மேலும், 23 மீட்டர் நீளமும், 10.46 மீட்டர் அகலமும், 3.5 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு சிறப்புத் தூண் வடிவமைக்கப்பட்டது.

இதில் கிட்டத்தட்ட 470 கன மீட்டர் கான்கிரீட் மற்றும் 1200 மெட்ரிக் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்து மற்றும் இதர வசதிகளுக்கு இடையூறு இல்லாமல், இந்த பிரமாண்ட தூண்கள் 2 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கடினமான வேலையை மிகக் குறைந்த நேரத்தில் முடித்தது ஒரு பெரிய சாதனை. வழித்தடம் 4ல் அமையவுள்ள வடபழனி மெட்ரோ நிலையம், வழக்கத்தைவிட உயரத்தில் இருப்பதால், 3 தளங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகத் தளமான கடைகள் மற்றும் பிற வணிக செயல்பாடுகளுக்கும், பொதுத் தளத்தில் பயணிகள் பயணச்சீட்டு வாங்குவதற்கும், உள்ளே செல்வதற்கும், நடைமேடை தளத்தில் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் இடம் என பிரிக்கப்பட்டுள்ளது. ஆற்காடு சாலை போன்ற மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில், இத்தகைய சிக்கலான மற்றும் மேம்பட்ட திட்டமிடலுடன் இந்த மெட்ரோ அமைப்பை நிறைவு செய்தது, பொறியியல் துறையின் ஒரு மிகச்சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.

 

Related Stories: