பாட்னா: பிரதமர் மோடியின் மறைந்த தாயாரை சித்தரித்து ஏஐ தொழில்நுட்பத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், அதை உடனடியாக நீக்க காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் மறைந்த தாயார் ஹீராபென் மோடி, பிரதமரின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பது போன்று, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் 36 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பீகார் காங்கிரஸ் கட்சி கடந்த 10ம் தேதி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது. இது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ அருவருக்கத்தக்கது என்றும், அவதூறானது என்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுதொடர்பாக டெல்லி காவல்துறையில் புகாரும் அளித்தது. ஆனால், பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு அறிவுரை கூறுவது அவமதிப்பு ஆகாது என காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி பி.பி.பஜந்தரி, பிரதமர் மோடியின் தாயார் தொடர்பான சர்ச்சைக்குரிய அந்த ஏஐ வீடியோவை அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் பிரசாரங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
